“For the 'theoretical' in chess is nothing more than that which can be found in the textbooks and to which players try to conform because they cannot think up anything better or equal, anything original.”- Mikhail Chigorin
இறையின் படைப்பில் அனைத்தும் தனித்தன்மை மிக்கவையே . ஒரு கலையின் வாயிலாக, அதுவும் ஒரு சிறு மாணவனாக, அதனை அந்த கோணத்தில் அணுகுவதே ஒரு எல்லையற்ற செயலாக உணர்கின்றேன் . சதுரங்கம் எனும் விளையாட்டில் சிறு வயதிலிருந்து ஈடுபட்டு வருவதால் , வயதிற்கு ஏற்றாற்போல அதனை அணுகுவதிலும் சிந்தனை வளர்ச்சி அடைந்து வருகின்றது. நேற்று வெங்கடேஷ் என்ற நெடுநாள் நண்பரின் பிறந்த நாள் . அத்தருணத்தில் ஒரு சிறு கட்டுரை எழுதலாமென அவருடைய சதுரங்க ஆட்டங்களை கணினியில் காணத் தொடங்கினேன். அவரின் தனித் தன்மை மிக்க ஆட்டம் பலகேள்விகளை மனதில் எழுப்பியதுண்டு. பயிற்சி என்பது ஒரு கலைக்கு அவசியம் தானென்றாலும் அது எவ்வகையில் அமையவேண்டும்? அஃது நினைவுகள், எண்ணங்கள் எனும் தடைக்கற்களாக ஒரு படைப்பாளியின் வழியில் நிற்கக்கூடாது. இது சதுரங்க உலகில் உள்ள ஒரு நிகழ்வு-பயிற்சி எனும் வாயிலாக பலர் (என்னையும் சேர்த்து) முன்பு நடந்த பல ஆட்டங்களை அலசுவர் , அதிலிருந்து சரி தவறு என தரவுகள் சேகரித்து பின் வரும் போட்டிகளுக்கு உதவியாய் இருக்கவேண்டுமென குறிப்புகள் எடுத்துக் கொள்வதுமுண்டு.
சிக்கலென்னவெனில் மேலதிக தரவுகள் நம்மிடம் சேர்ந்தால் நமது சிந்தனையின் மூலவூற்று அடைக்கப்படும் , அதனால் , நாம் நமது தனித்தன்மையினை இழக்கின்றோம் . இது வெற்றியை தருகிறதோ இல்லையோ , இது இறையின் படைப்பிற்கு மாறானது , மனிதர்களாக (இறையின் குழந்தைகளாக) நாம் இவ்வாறு இயங்கக் கூடாது .
இந்த பின்னணியில் நான் வெங்கடேஷ் அவர்களின் ஆட்டங்களை உள்வாங்கினேன். முன்பே நேரடி நட்புண்டு என்பதனால் அவரின் தன் சிந்தனையை மட்டும் பயன்படுத்தி சதுரங்க முடிவுகளை எடுக்கும் பாங்கு நான் நன்கறிவேன் . முகப்பு வாசகமாக அமைந்த சிகோரின் சொன்னது மிகவும் பொருத்தமாக இருக்கும் ! இது போன்று விளையாட்டு வீரர்கள் பலருண்டு , அவர்களின் விளையாட்டு உத்திகள் கற்றுக் கொள்வது என்பது ஒரு பக்கம் நன்றாகவே இருந்தாலும் அவ்விதமான தனித்தன்மை நமது பாணியில் நாம் செயல்படுத்தவேண்டும் என்பதே சிறப்பு .
ஜூடித் போல்கர் எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெண் சதுரங்க வீராங்கனை இவ்வாறு சிறந்த படைப்புகளைப் படைத்துள்ளார் . ஒரு ஒப்பாய்வாக சதுரங்க நுணுக்கங்களை எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன்.பிடித்த வாசகர்கள் அதனை அணுகலாம். தொடுப்பு இங்கே :- கட்டுரைக்கான தொடுப்பு
🙏🙏